ஆண்கள் ஐக்கிய சங்கம்
“அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும்ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்” (1 தீமத். 2:8)


ஆதித் திருச்சபைகளில் ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கியும் பெண்களின் பங்கு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டும் காணப்பட்டது. ஆண்டவர் சமூகத்தில் ஆண்களும் பெண்களும் சமம் என வேதம் சொல்கிறது (ஆதியா. 1:27, கலா. 3:28). ஆனாலும் திருச்சபையின் தலையாய பணிகளில் பெண்களுக்கு குறுகிய பங்கு கொடுக்கப்பட்டு வந்தது. புதிய ஏற்பாட்டின் காலத்தில் அந்நிலை மாறி பவுல் தனது ஊழியங்களில் பெண்களையும் இணத்துக் கொண்டதைக் காண்கிறோம். (பிலி, 4:2, ரோமர் 16:3). ஆனாலும் திருச்சபைப் பணிகளில் பெண்களுக்கு மிகக் குறுகிய பொறுப்புகளே கொடுக்கப்பட்டு வந்தன. இந்நிலை சமீப காலங்களில் மாறிப் போய் பெண்கள் அதிகப் பொறுப்புகளில் ஈடுபடத்தொடங்கியதால் ஆணாதிக்கம் குறைந்து பெண்கள் ஊழியங்கள் வளரத் தொடங்கியது. ஆண்கள் சபைச் சடங்காச்சாரங்களிலும், பெண்கள் ஆவிக்குரிய காரியங்களிலும் முன்னேறத் தொடங்கிய நிலை உருவாகியது. காலப்போக்கில், அனேக ஆண்கள் திருச்சபையின் ஆவிக்குரிய காரியங்களில் உற்சாகமிழந்து தீய பழக்கங்களிலும் தவறானவழிகளிலும் செல்லத் தொடங்கினர். இதன் காரணமாக பெண்கள் ஐக்கிய சங்கங்களைப் போன்று ஆண்கள் ஐக்கிய சங்கங்களும் திருச்சபைகளில் ஆரம்பமாகத் தொடங்கின.

ஆண்கள் ஐக்கிய சங்கமானது முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது என்பது பற்றிய சரித்திரபூர்வமான தெளிவு இல்லை. ஏறக்குறைய 1950 ஆம் ஆண்டிற்குப் பின் சில திருச்சபைகளில் பல்வேறு காரணங்களுக்காக இது ஆரம்பிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்தியாவில் 1980 ஆம் ஆண்டு திருநெல்வேலி பேராயத்தின் இருநூறாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது ஆண்கள் ஐக்கிய சங்கம் தொடங்கிவைக்கப்பட்டதாக தெரிகிறது.

நம் திருச்சபையில் இதன் தொடக்கமானது முக்கியத்துவம் வாய்ந்தது. 1995 ஆம் ஆண்டுகளில் சபை மக்களிடையே சமாதானமின்மையும் ஐக்கியமின்மைமையும் நிலவ ஆரம்பித்தது. இந்நிலை அதிகமாகியதின் நிமித்தமாக நமது திருச்சபை அங்கத்தினர் திரு. பாண்டியன் அவர்கள் வேலூரில் காவல் அதிகாரியாக 1995 ஆம் ஆண்டில் பணியில் இருந்தபோது அவரது தலைமையில் ஆண்கள் மத்தியில் ஆலய ஆராதனைக்குப்பின் ஒரு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது “இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது” (சங். 133:1) ஏன்பதை மையமாகக் கொண்டு நல்லாலோசனைகளை வழங்கிய பின் ஆண்கள் ஐக்கியச் சங்கம் ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்.

இக்காலகட்டத்தில் பெண்கள் ஐக்கியச் சங்கம் மூலமாக மாதம்தோறும் ஆலய ஆராதனைகளுக்குப்பின் வேத ஆராய்ச்சி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு முறையும் கூட்டம் முடிந்தபின் பங்குபெறும் தாய்மார்களை அழைத்துச் செல்ல கணவன்மார்கள் சோம்பலாய் காத்திருப்பர். இதன் நிமித்தமாக ஒரு சில ஆண்கள் தாங்களும் அந்த தினங்களில் வீணாய் காத்திருக்காமல் வேத ஆராய்ச்சி தொடங்கலாம் என்று எண்ணியதின் விளைவாக 2011 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் Dr. சிம்ஸன் அவர்களது முயற்சியில் ஒரு சில ஆண்கள் ஆலயத்தின் அடித்தளத்தில் கூடி சபை ஆயர் Rev. அப்ஸலோம் பர்னபாஸ் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடததினர். அதைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி ஆலய ஆராதனைக்குப் பின் ஏறக்குறைய 15 ஆண்கள் ஆலயத்தின் அடித்தளத்தில் குழுமி காலம்சென்ற திரு. ஹில்லல் ஜாண்ஸன் அவர்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்தனர். அதன்பின் நான்கு தடவைகள் நடந்த கூட்டங்களில் அங்கத்தினர்கள் செய்திகளை பகிர்ந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கத்தினர் வருகைப் பதிவேடு தொடங்கப்பட்டு 24.06.2012ல் நடந்த கூட்டத்தில் இதற்கு முழு வடிவம் கொடுக்கும் வண்ணமாக திரு. இம்மானுவேல் அவர்கள் துணைத் தலைவராகவும் திரு பெஞ்சமின் சாமுவேல் செயலராகவும், திரு அருள் தாமஸ் துணைச் செயலராகவும், திரு. செல்வின் ரெத்னராஜன் பொருளராகவும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். அக்கூட்டத்தில் சங்கத்தின் பொருளாதர தேவைகளுக்கென அங்கத்தினர்கள் மாத சந்தா செலுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. நமது சபையின் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அங்கத்தினர் ஆகும் தகுதி பெற்றவர் எனவும் தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்களில் வேத பகுதிகளின் அடிப்படையில் செய்திகளை அங்கத்தினர் பகிர்ந்தனர். அதன்பின், முறைப்படியான வேத ஆராய்ச்சியினை Dr. சிம்ஸன் அவர்கள் ஒளிப்படக் கருவி உதவியுடன் அப்போஸ்தலர் நடபடியிலிருந்து தொடர்ந்து நடத்தினார்.

Dr. சிம்ஸன் அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஜூண் மாதம் பணியின் நிமித்தமாக வெளியூர் சென்றதால் வேத ஆராய்ச்சியானது தொடர்ந்து இதர வேத பகுதிகளிலிருந்து திரு. பெஞ்ஜமின் அவர்களால் நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் Rev. ஐஸக் ராஜா அவர்கள் வந்தபின் ஒளிப்படக் கருவி உதவியோடு வேத ஆராய்ச்சி வகுப்புகளை அங்கத்தினர் மத்தியில் தொடர்ந்தார்.

இவைதவிர பல்வேறு நலப்பணிகளும் ஆண்டு தோறும் தொடர்ந்தன. சபையின் அங்கத்தினர் சுகவீனமாய் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாலோ அல்லது வீடுகளில் இருந்தாலோ, அவர்களை சந்தித்து ஜெபித்தல், குடும்ப அங்கத்தினர் இறந்தால் குடும்பத்தில் சென்று ஜெபித்து ஆறுதல் கூறுதல் போன்ற நற்காரியங்களை இச்சங்கமானது செய்யத் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் கிறிஸ்மஸ் விழாவானது ஆயரின் சிறப்புச் செய்தியோடு அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கி சிறப்புற நடைபெற்று வருகிறது. ஆண்கள் சங்கத்தின் முயற்சியோடு 2015 ஆம் ஆண்டுமூன்று நாள் இசைவழி லெந்துகால சிறப்புக்கூட்டமானது Dr. ஐசக் பாலசிங் மற்றும் Dr. ஜாஃபி ஐசக் தம்பதியினரால் நடத்தப்பட்டது. மாதத்தின் ஐந்தாவது ஞாயிறுகளில் ஆண்கள் ஐக்கிய சங்கத்தினரால் சிறப்புப் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. ஆண்கள் ஐகிய சங்கத்தின் பெரு முயற்சியால் நன்கொடைகள் திரட்டப்பட்டு ஆலயமானது குளிர்சாதனமயமாக்கப்பட்டது.

13.12.2015 அன்று புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றது. அதில் திரு. M. இம்மானுவேல் (Late) உபதலைவராகவும், திரு. பெஞ்சமின் சாமுவேல் செயலராகவும், திரு அகஸ்டின் அவர்கள் பொருளராகவும் பொறுப்பேற்றனர். நம் திருச்சபையில் நெடுங்காலமாக நின்றுபோயிருந்த மாதாந்திர ஜெபக் கூடுகையானது ஆண்கள் ஐகிய சங்கம் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கத்தின் கூட்டு முயற்சியால் புத்துயிர் பெற்று 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊரடங்கு நாட்களிலும் Zoom meet வழியாக தொடர்ந்து நடைபெற்றது. திருச்சபையின் அறுப்பின் பணடிகைகளிலும், வாராந்திர ஜெபக் கூடுகைகளிலும் ஆண்கள் ஐகியச் சங்கத்தினர் உற்சாகத்தோடு பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு இச்சங்கத்தின் புதிய செயற்குழுவில் திரு. பெஞ்சமின் சாமுவேல் உபதலைவராகவும், திரு. செல்வின் ரெத்தினராஜன் செயலராகவும், திரு. வசந்தகுமார் ரேனியஸ் பொருளராகவும் பொறுப்பேற்றனர். பெருந்தொற்று காலத்தின் தடைச்சட்டத்தால் ஆலய செயல்பாடுகளில் தடங்கல்கள் ஏற்பட்டதனால் இச்சங்கத்தின் செயல்பாடுகளும் முடங்கிப்போயின.

இவ்வாறாக சிறப்புவாய்ந்த ஆண்கள் ஐக்கிய சங்க ஊழியமானது கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஐக்கியத்தில் நிலைத்திருந்து, திருச்சபையின் செயல்பாடுகளைத் தாங்கி, தெளிவான பார்வை, சீரிய இலக்கு, ஜெபம் மற்றும் ஆவிக்குரிய பணிகளில் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல ஆண்டவர் அருள் புரிவாராக!

தற்போதைய பொறுப்பாளர்கள்:-

ஸ்தல போதகர் & தலைவர் Rev. J. டேவிட் ஞானப்பிரகாசம்
உப. தலைவர் திரு. ஜோசப் துரைராஜ்
செயலர் திரு. சாமுவேல் ராஜா
பொருளர் திரு. S.அகஸ்டின்


“கடைசியாக சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள், ஏகசிந்தையாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடே கூட இருப்பார்” (2 கொரி. 13:11)


இப்படிக்கு, ஆண்கள் ஐக்கிய சங்கம்