சகல பரிசுத்தவான்கள் திருச்சபை ஞாயிறுப்பள்ளி

“பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்”. (நீதிமொழிகள் 22:6)

ஒருமுறை அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் அவர்கள் கூறுகையில் "ஒரு சராசரி உயர்நிலைப் பள்ளி மாணவன், அவன் பட்டம் பெறும் நேரத்தில், பள்ளியில் 11,000 மணிநேரமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு 15,000 மணிநேரமும் செலவிட்டிருக்கிறான்; அதில் அவன் ஞாயிறுப்பள்ளி வகுப்பில் 500 மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறான் என்பதை நான் சேர்க்க விரும்புகிறேன்." என்று வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

திருச்சபை பணிகள்:

கீழேகண்ட வேத வசனங்களை நாம் கவனித்துப் பார்த்தால் பழைய ஏற்பாட்டுக் காலம்தொடங்கி புதிய ஏற்பாட்டின் காலம்வரை வேதபாட வகுப்புகள் பெரியோர் மற்றும் சிறியோர்களுக்காக இயங்கி வந்ததை அறிய இயலும். இயேசுவானவரும் வேதபாட வகுப்பில் பயின்றதை அறிய முடிகிறது. கீழ்கண்ட வேத வசனங்கள் அதற்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

 • ஓரேபிலே தேவன் மோசேயிடம் கூறியதாவது, “என் வார்த்தைகளை ……….உன் பிள்ளைகளுக்கும், உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக் கடவாய்.” (உபாகமம் 4:10)
 • “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.” (அப்போஸ்தலர் 7:22)
 • “வேதவாக்கியங்கள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமத்தேயு 3:16)
 • “அவர் (இயேசு)அனேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்” (மாற்கு 4:2)
 • “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4)
 • பவுல், " நான் யூதன் ……. முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய் போதிக்கப்பட்டு…... நானும் வைராக்கியமுள்ளவனானேன்” என்று கூறுகிறார். (அப்போஸ்தலர் 22:3)
 • “அவைகளை (அவர் வார்த்தைகளை) உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து………. அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக.” (உபாகமம் 11:20, 6:7)
 • “மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.” (லூக்கா 2:46)

ஞாயிறுப் பள்ளியின் சரித்திரப் பின்னணி:

உலகில் ஞாயிறு பள்ளிகள் உருவான கதை மிகவும் ஆச்சரியமானது. இங்கிலாந்து நாட்டில், 18 ம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லவேண்டிய ஏழை மாணவர்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்று பொருளீட்டத் தொடங்கினர். எனவே பள்ளிக்கல்வியின்றி படிப்பறிவு குன்றத் தொடங்கியது. வசதி படைத்தோர் வீடுகளில் தனியாகக் கல்வி பயில ஏற்பாடு செய்தனர். ஆனால் வசதியற்ற குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருக்களில் தவறான செயல்களில் இறங்கினர்.

இதனைக்கண்ட றாபெர்ட் றைக்ஸ் என்பவர் அப்படிப்பட்ட குழந்தைகளை 1780 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள க்ளௌசெஸ்டர்ஷயர் என்னும் ஊரில் உள்ள ஒரு வீட்டில் கூடிவரச்செயது வேதாகமத்தை பாடபுத்தகமாக வைத்து ஆங்கில பாட போதனையை ஆரம்பித்தார். இதனைப் பல போதகர்கள் ஆலய ஆராதனை தடைபட்டதால் எதிர்த்தாலும் திருச்சபையினர் ஆதரிக்கத் தொடங்கினர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இதன் விளைவுகள் பற்றி தான் நடத்தி வந்த “The Gloucestershire Journal” என்னும் ஆங்கில வாரப்பத்திரிகையில் வெளியிட்டதின் நிமித்தமாக இது உலகம் முழுவதிலும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. 1811 ல் அவர் இறப்பதற்கு முன் 500,000 குழந்தைகளுக்குமேல் கலந்து கொண்டனர். இதன் ஆசிரியர்கள் தங்கள் இல்லங்களிலேயே ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் கல்வியோடு வேதபாட வகுப்புகளையும் நடத்தினர்.

18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஞாயிறுப்பள்ளி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. நமது நாட்டிலும் மிஷனெறிகளால் குழந்தைகள் முதல் பெரியோர்வரை அனைவருக்கும் வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டு நல்லொழுக்கங்களும் கற்பிக்கப்பட்டது. இதனால் பல திருச்சபைகள் உருவாயின.

எமது ஞாயிறுப் பள்ளியின் வரலாறு:

இத்தகைய சிறப்புவாய்ந்த ஞாயிறுப்பள்ளியானது, நமது திருச்சபை ஆரபிக்கப்பட்ட காலத்திலிருந்தே செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் காரணமாக திருச்சபை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் இறையன்பு, வேதஅறிவு மற்றும் நல்லொழுக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1948 ஆம் ஆண்டுகளில் ஞாயிறுப் பள்ளியின் செயல்பாடுகள் மிக சிறப்பு பெற ஆரம்பித்தது. திருச்சபையின் சில வாலிபர்கள் மற்றும் முக்கியமான முதியவர்களின் தீவிர பங்களிப்பின் மூலமாக மாணவர்கள் உற்சாகப் படுத்தப்பட்டு பலவிதமான நற்பணிகளும் தொடங்கின. இக்காலகட்டத்தில் குன்னூரில் உள்ள இந்திய ஞாயிறுப்பள்ளி இயக்கத்திலிருந்து (ISSU-Indian Sunday School Union) பாடப்புத்தககங்கள் வரவழைக்கப்பட்டு வேதபாட வகுப்புகள் நடத்தப்பட்டன. பேரின்ப கீதங்களிலிருந்து பாடல்கள் கற்பிக்கப் பட்டன. குருவானவர் இல்லத்தின் தாழ்வாரத்தில் வகுப்புகள் ஒழுங்காக நடைபெற்றன.

இடைப்பட்ட காலத்தில் சிறிது உற்சாகமிழந்து அதன்பின் 1980 ஆம் ஆண்டில் மீண்டும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. புது ஆலயமானது 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதியன்று அர்ப்பணம் செய்யப்பட்டபின் ஆலய அடித்தளத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்காலகட்டத்தில் திருச்சபையால் நியமிக்கப்பட்ட புது தலைவர்கள் பொறுப்பேற்று சிறந்த ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை முறைப்படுத்தினர். வயது அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாடப்புத்தகங்களை குமரிப் பேராயம் மற்றும் திருநெல்வேலிப் பேராயங்களிலிருந்து வருவித்து மிகச் சிறப்புற கற்பிக்கப்படுகிறது. தற்பொழுது தமிழ் வழி போதனையும் விருப்பப்படுவோருக்கு ஆங்கிலவழிப் போதனையும் பின்பற்றப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அற்பணிப்புடன்கூடிய ஆசிரியைகள், மாணவர்களை ஆண்டவரின் பாதையில் வழிநடத்திச் செல்வது திருச்சபைக்கு மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது.

எமது ஞாயிறுப்பள்ளியின் தொலைநோக்கு அறிக்கை (Vision and Mission statement):

“பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” (நீதி. 22:6)

இதன் நோக்கங்கள்:

 • குழந்தைகள் உள்ளங்களில் இயேசுவின் அன்பை உணரவைத்து வேத வசனங்களின் வழியாய் வாழ வழிகாட்டுதல்
 • மத பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அன்பாயிருக்கக் கற்பித்தல்
 • தேவ வழிபாடு மற்றும் திருச்சபை செயல்பாடுகளில் தவறாது பங்குபெற்று திருச்சபைக்கு ஆதாரமாய் திகழ பயிற்றுவித்தல்
 • திருச்சபைக்கும், சமுதாயதிற்கும், நாட்டிற்கும் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி சேவைபுரிய வழிகாட்டுதல்

பயிற்றுவிப்பவரின் பங்கு:

ஆசிரியர்கள், பாடத்திட்டத்திற்காக தன்னை ஆயத்தம் செய்தல், பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்துதல், வகுப்பறையை ஆயத்தப்படுத்துதல், பயிற்றுவிப்பிற்கு தேவையான உபகரணங்களை சேகரித்தல், வகுப்பிற்கு முன்பும் பின்பும் ஜெபித்தல், மிஷனெறி கதைகளை அறிமுகப்படுத்துதல், நன்னெறிகளை கற்பித்தல், பாடல்களைக் கற்பித்தல், மனப்பாட வசனங்களைக் கற்பித்தல், இன மத சமுதாய பேதமின்றி பாரபட்சமற்ற முறையில் சமமாக மாணவர்களை நடத்துதல், வேத அடிப்படையிலான போட்டிகளுக்கு மாணவர்களை ஊக்குவித்தல், திருச்சபை மற்றும் சமுதாய தொண்டுகளில் ஈடுபட மாணவர்களை உற்சாகப்படுத்துதல், எல்லாவற்றிற்கும் மேலாக தான் முன்மாதிரியாக இருத்தல் போன்ற பல்வேறு விஷயங்களில் திறமையாக இருக்கிறார்கள்.

பெற்றோரின் பங்கு:

பெற்றோர்களுக்கான கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், மாணவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களை வீட்டிலும் கற்பித்தல், ஞாயிறுப் பள்ளியில் பயின்ற ஒழுக்கங்களை ஊக்குவித்தல், ஆசிரியர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆசிரியர்கள் மாணவர்களோடு சுற்றுலா செல்ல உதவுதல், தேவைப்படும்போது உதவி ஆசிரியராக செயல்படுதல் போன்றன குறிப்பிடத்தக்கவை.

திருச்சபை மற்றும் ஆயரின் பங்கு:

ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல், ஞாயிறுப்பள்ளியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது, ஞாயிறுப்பள்ளியின் பணத்தேவைகளில் திருச்சபைமூலமாக உதவுதல், ஆசிரியர்களைப் பயிற்சிக்கு அனுப்புதல், பாட புத்தகம் மற்றும் இதர உபகரணங்களை வாங்குதல் மற்றும் இதுபோன்ற பணிகளை திருச்சபை கண்காணிக்கின்றது.

இதன் முக்கியமான பணிகள்:

பலஆண்டுகளாக நமது ஞாயிறுப்பள்ளியின் மூலமாக இதுவரை நடைபெற்றுள்ள பல்வேறு முக்கிய பணிகளாவன:

 • ஆலய ஆராதனையின்போது மாணவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லுதல்
 • வகுப்புவாரியாக பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு வேத பாடம் பயிற்றுவித்தல்
 • மாணவர்களை வேதஒழுக்கப்படி நடக்கக் கற்பித்தல்
 • மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடல்கள் கற்றுக் கொடுத்தல்
 • காணிக்கையின் முக்கியத்துவத்தைப் பயிற்றுவித்து காணிக்கை கொடுப்பதை உற்சாகப் படுத்துதல்
 • மனப்பாட வசனங்களை மனப்பாடம் செய்ய பயிற்சி அளித்தல்
 • விடுமுறை வேதாகமப்பள்ளி மூலமாக சபையின் மாணவர்கள் மற்றும் அருகாமையில் உள்ள மாணவர்களையும் இணைத்து வேதபாட வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்துதல்
 • அகிலஉலக வேதாகமப் பள்ளி தினத்தன்று (World Sunday School Day) பேராயத்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேவனை மகிமைப் படுத்துதல்
 • வேலூர் ஞாயிறுப் பள்ளி இயக்கம் (Vellore Sunday School Union) மூலமக ஆண்டுதோறும் நடைபெறும் பேரணியில் பங்கெடுத்தல்
 • ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் விழா நடத்தி பல்வேறு போட்டிகள் மூலமாக மாணவர்களை மகிழ்வித்தல்
 • ஆலய ஆண்டுவிழாவின் போது பிற திருச்சபை ஞாயிறுப்பள்ளி மாணவர்களைக் கூட்டி பேரணி நடத்துதல்
 • மாதம் ஒருமுறை இரண்டாம் ஞாயிறு தோறும் ஆலய ஆராதனையில் பாடல்கள், நடனம், குறு நாடகம் மற்றும் மனப்பாட வசனங்கள் ஒப்புவித்தல்,மற்றும் காணிக்கை சேகரித்தல் போன்றவைகள் மூலமாக ஆராதனையைச் சிறப்பித்தல்
 • ஆண்டுக்கு ஒருமுறை தேர்வுகள் நடத்தி பரிசளித்து உற்சாகப்படுத்துதல்
 • பெருந்தொற்று காலத்தில் மெய்நிகர் வகுப்புகள் (Virtual class) வழியாக பாடம் நடத்துதல்
 • நீண்டநேர சிறப்பு ஆராதனைகளின் போது மிஷனெறி சரிதைகள், மற்றும் வேத அடிப்படையிலான திரைப்படங்கள் மூலமாக மாணவர்களை நன்னெறியில் நடக்க ஊக்குவித்தல்
 • அறுப்பின் பண்டிகையின்போது பொருட்கள், தின்பண்டங்கள், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மூலமாக விழாவினைச் சிறப்பித்தல்
 • பேராய சிறுவர் கூடுகையின்போது போட்டிகளில் பங்கெடுத்தல்
 • வேதாகம ஐக்கிய சங்கத்தினர் நடத்தும் கூடுகை மற்றும் போட்டிகளில் தவறாது பங்கெடுத்தல்
 • ஒரு நாள் ஒடுக்கக் கூட்டங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென ஏற்பாடு செய்தல்
 • நாடகங்கள்மூலமாக ஆலய கட்டிட பணிகளுக்கென பணம் திரட்டுதல்
 • திருச்சபையின் வாலிபப் பிள்ளைகளை ஆசிரியர் பணிக்கு ஊக்குவித்தல்
 • விடுமுறை வேதாகமப் பள்ளி இயக்குநர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி மற்றும் தன்னார்வலர் (Volunteers) பயிற்சிகளில் பங்கெடுத்தல்

இத்தகைய சிறப்புவாய்ந்த ஊழியத்தைக் காலாகாலமாக தாங்கிவந்த நம் ஞாயிறுப்பள்ளியின் பொறுப்பாளர்களில் கீழ்க்கண்டோர் குறிப்பிடத் தக்கவராவர்:

திருமதி. ஃப்ளோறா ஸ்டான்லி, திரு. ஞானம் தியோடர், திருமதி. சவுந்தரா வின்ஃப்றெட், திருமதி. ரெத்னாபாய் ஜோயல், திரு. பால்ராஜ் சாமுவேல், திருமதி. இஸபெல்லா சார்லஸ், திருமதி. ஹெப்ஸிபா தாமஸ், டாக்டர். Y. சிம்ஸன், திருமதி பியூலா நியூட்டன், திரு. பெஞ்ஜமின் சாமுவெல், திருமதி. பிரசன்னா ஸாம், திருமதி றேச்சல் ஈஸ்டர் ராஜன், திருமதி றோஸ்லின் வஸந்த குமார்.

இவ்வாறாக திருச்பையின் வருங்காலத் தூண்களையும், மிஷனெறிகளையும் உருவாக்கும் மகத்தான பணியினை செய்துவரும் ஞாயிறுப்பள்ளியையும் அதன் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஜெபங்களினால் தாங்கிபிடிப்பது திருச்சபையின் அங்கத்தினர் ஒவ்வொருவரின் கடமை என்பதனை நாம் உணர்ந்து செயல்படுவோமாக. தேவன் இந்த ஊழியத்தைத் தொடர்ந்து அதிகமாக ஆசீர்வதிப்பாராக!

"பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்" (சங்கீதம் 34:11)

இப்படிக்கு, ஞாயிறுப்பள்ளி பொறுப்பளர்கள் மற்றும் ஆசிரியர்கள்